ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு தேங்காய் உடைத்து பூஜை போட்டதே விஜய் தான் – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

டெல்லி: ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு பூஜை போட்டு, தேங்காய் உடைத்தது யாரு, விஜய்தானே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து அவரிடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறுகையில், சகோதரர் விஜய் அவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும். ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு திறப்புவிழா நடத்தியதே விஜய்தான். அவர் நடித்த குருவி படத்தின் மூலம்தான் இந்த நிறுவனம் அறிமுகமானது.

விஜய்தான் அந்த நிறுவனத்தை தனது படம் மூலம் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். குருவி, பீஸ்ட் என எந்த படமாக இருந்தாலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பை மட்டும் பார்த்துக் கொள்ளாது, விநியோகத்தையும் சேர்த்தே பார்க்கும்.

நான் இதையெல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறேன். யாராவது பாஜக மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என்றால், சகோதரர் விஜய் அவரையே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். ரெட் ஜெயண்ட் மூவிஸை அறிமுகப்படுத்தியது யாரு? மீடியா இன்டஸ்ட்ரியே ஒரு தனிப்பட்ட நபர் அதிலும் உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பூஜை போட்டு தேங்காய் உடைத்தது யாரு?

இன்று மேடையில் ஏறி எல்லாரும் அண்ணாமலை இப்படி, அப்படினு பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் நான் பதில் சொன்னால் தவறாக போய்விடும். தவெகவில் இருக்கும் ஒருவர் (ஆதவ் அர்ஜுனா) அன்று திமுகவுக்கு வேலை செய்தார்.

லாட்டரி பணத்தின் மூலம் திமுகவில் இருந்து விசிகவுக்கு தாவினார். அங்கிருந்து தவெகவுக்கு தாவியுள்ளார். அவருடைய கோட்பாடு என்னவெனில் தமிழக வெற்றிக் கழகத்தை லாட்டரி விற்பனை கழகமாக மாற்றுவதுதான். அப்படிப்பட்டவர் என்னை குறை சொல்கிறார்.

அரசியல் என்பது மைக் இருக்கிறதே என்பதற்காக பேசுவது கிடையாது. களத்தில் நின்று வேலை செய்ய வேண்டும். நான் விஜய்க்கு ஒரு சின்ன அரசியல் பாடம் எடுக்கிறேன். 1973 ஆம் ஆண்டு கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது. தற்போது 2026 இல் பேசுகிறோம்.

சகோதரர் விஜய் அந்த 1973 ஆம் ஆண்டு நடந்தது என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு அரசியல் புரிதல் தேவை! 1973 ஆம் ஆண்டு மக்களவையின் எண்ணிக்கை 525 லிருந்து 545 ஆக உயர்ந்தது. அதாவது 20 சீட்டுகள் உயர்ந்தன.

அந்த 20 இல் தமிழகத்திற்கு என்ன கிடைத்தது? ஒன்றுமே கிடைக்கவில்லை. 20 சீட்கள் உயர்த்தியும் 1973 இல் தமிழகத்திற்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. சில மாநிலங்களுக்கு 3, சில மாநிங்களுக்கு 2 என அதிகமாக கிடைத்தது. அப்போது ஆட்சியில் இருந்தது யார்? காங்கிரஸ்! தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழகம் சார்பில் சென்றவர் கருணாநிதி. 1973 ஆம் ஆண்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு சென்றும் கருணாநிதியால் தமிழகத்திற்கு ஒரு சீட்டு கூட பெற்றுத் தர முடியவில்லை. எனவே, விஜய் யாரை விமர்சிக்க வேண்டும்?

2026 இல் தொகுதி மறுவரையறை செய்யும் போது தமிழகத்திற்கான சீட்டுகள் குறைந்தால் கேட்கலாம். அதற்கு முன்னாடியே விஜய் பேசும் போது ஆதாரத்துடன் அரசியல் புரிதலுடன் பேச வேண்டும். ஒரு ரவுடி இன்னொரு ரவுடியை அடித்தால்தான் அவர் ரவுடி என மக்கள் ஒப்புக் கொள்வார்கள்.

மீடியா வெளிச்சத்திற்காக பிரதமரை காட்டமாக விமர்சிக்கிறார். அவர் எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் பேசினால் நான் பதில் அளிப்பேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் திமுகவையும் பாஜகவையும் ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் குறித்தும் அவர் பேசியிருந்தார். இதற்கு அண்ணாமலை தற்போது பதிலளித்துள்ளார்.