கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், திமுகவின் கட்சிக் கொடியை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அந்தக் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலம் நேற்று முன்தினம் காலையில் கோவைக்கு வந்தார்.
தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காகவும், வரவேற்பதற்காகவும் கோவை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் குவிந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டன.
ஆனால், விஜயைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விமான நிலையத்தில் குவிந்த நிர்வாகிகள் மற்றும் பலர் அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் மற்றும் டிராலிகளை உடைத்தும் சேதப்படுத்தினர். இதனால், விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் இருந்து பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன.
விமான நிலைய சாலையில் அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வந்த வாகனங்கள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல, சாலையிலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் பீளமேடு போலீசார் தமிழக வெற்றிக் கழக மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் உட்பட பலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதில், விமான நிலையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியாக மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகையை ஒட்டி விமான நிலையம் சாலையில் தி.மு.க கொடி நடப்பட்டு இருந்தது. அந்தக் கொடிகளையும் சிலர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க. கொடியை சேதப்படுத்திய நிர்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து, ஒட்டன்சத்திரம் மனோஜ் குமார் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.