முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி – விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு..!

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 16ம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கை எதிர்த்து டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். பலமுறை வாதாட கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவரது தரப்பில் ஆஜராகி வாதாடவில்லை. அதைதொடர்ந்து நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் 5 நாட்கள் ஆஜராகி அவரே வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.இந்த வழக்கு பிப்.9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது வாதத்தை முன் வைத்தார்.

அன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பு வாதம் நிறைவடைந்தது. மேலும் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார். மேலும் ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.