இதேபோன்று நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய அறிவிப்புகள், அரசு திட்டம் தொடர்பான புதிய ஆணை பிறப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசுத் துறைகளின் செயலர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில், இறுதி அரசாணை வெளியிட்ட பின் ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அதை நகல் எடுத்து, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி அதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கலாம் எனவும், குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அரசாணை தொடர்பான பதிவேடுகளை அனுப்ப வேண்டும் எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மூன்று கம்பெனி துணை ராணுவத்தினர் கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவை வந்தனர். கேரள மாநிலம், கொச்சியில் இருந்து விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை தேர்தல் பிரிவு போலீஸார் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து கோவை நகரிலேயே ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் தங்கினர். திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக தலா ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சென்னைக்கு துணை ராணுவப் படையை சேர்ந்த இரண்டு கம்பெனியும், ஆவடி, தாம்பரத்திற்கு தலா ஒரு கம்பெனியும் என மொத்தம் 7 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகை தந்தனர்.