சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல கோடி பேரை பாதித்தது. 65 லட்சத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.
கொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிக்க உலகமே முடங்கியது. பல நாடுகள் மாதக்கணக்கில் லாக்டவுனை அமல்படுத்தின. வேலையிழப்பு, தொழில் முடக்கம் என மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த ஆண்டு இறுதியில் இருந்துதான் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் அதிகரித்தது. அதோடு கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதத்திற்குப் பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோவையில் 18 பேரும், சென்னையில் 16 பேரும் செங்கல்பட்டில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவது அவசியம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 1,134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 137 நாட்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 பேர் பலியாகினர். சத்தீஸ்கர், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பலி பதிவாகி உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா இறப்பு என்பது 5,30, 813 என்ற அளவில் உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்வது 0.98 சதவீதம் என இருந்த நிலையில் தற்போது 1.09 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது எக்ஸ்பிபி வகை வைரஸ் தான் பரவி வருகிறது. எக்ஸ்பிபி வைரஸ் என்பது ஓமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸ்களாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்பிஎப், பிஏ5.2.3 மற்றும் பிஏ2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என கூறப்படுகிறது. இந்தியாவில் வைரஸின் மரபணு மாற்றத்துடன் எக்ஸ்பிபி 1.16 என்ற வைரஸ்கள் பரவி வருகின்றது. இந்த வைரஸ்கள் தான் நிறைய பேரை தற்போது பாதித்து வருகின்றது. எக்ஸ்பிபி 1.16 வைரஸ் வேகமாக பரவ கூடியதாக இருகிறது. சாதாரணமாக தும்மல் போட்டாலே அது மிக எளிதாக மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இன்று கொரோனா தடுப்பு தொடர்பாக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது டெஸ்ட், ட்ரக், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிப்பது தொடர்பான Mock Drils மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. நான்கு மாதங்கள் மக்கள் வீடுகளில் முடங்கினர். படிப்படியாக லாக்டவுன் விலக்கிக்கொள்ளப்பட்டது. 2021ஆம் ஆண்டு கொரோனா இரண்டாவது அலை பரவியதை அடுத்து மீண்டும் லாக்டவுன் அமலானது. கடந்த ஆண்டு முதலே உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்கள் பொது இடங்களில் அச்சமின்றி நடமாடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? லாக்டவுன் அமலாகுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. அதே நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடிய நிலை இங்கு இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.