வயநாடு இடைத்தேர்தல்… பிரியங்கா வரலாற்று வெற்றி… எம்பியாக இன்று பதவியேற்பு..!

டெல்லி: வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற எம்பியாக பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பிரியங்கா காந்தி எம்பியாகி இருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதி இருப்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிட்டார். கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்துடன் வரலாற்று வெற்றியை பிரியங்கா காந்தி பெற்றார். பிரியங்கா காந்தி மொத்தம் 6,22,338 – வாக்குகள் பெற்றார்.

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், இடது முன்னணி, பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவியது. 3 வேட்பாளர்களை தவிர, போட்டியிட்ட பிற கட்சி வேட்பாளர்கள் 5 பேர், 8 சுயேச்சை வேட்பாளர்கள் ஆகிய 13 பேரும் டெபாசிட் இழந்தனர்.

பிரியங்கா காந்தி இதுவரை நேரடி அரசியலில் களம் கண்டது இல்லை. தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ரகுல் காந்திக்கு பிரசாரம் மட்டுமே செய்து வந்த பிரியங்கா காந்தி முதல் முறையாக வயநாடு தேர்தலில் வென்றதன் மூலம் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற எம்பியாக பதவியேற்க உள்ளார்.

அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பிரியங்கா காந்தி எம்பியாகி இருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பிரியங்கா காந்தியின் வருகை இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள்..