வயநாடு பெருந்துயரம்: பல உயிர்களை காவு வாங்கிய நிலச்சரிவு… மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடல்..

திருவனந்தபுரம்: கேரளாவில் இடைவிடாது கொட்டும் அதீதமான தென்மேற்கு பருவமழையால் வயநாடு மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும் 200-க்கும் அதிகமானோர் கதி என்ன என்பதும் தெரியவில்லை. இதேபோல மற்றொரு சுற்றுலா தலமான மூணாறு பகுதியிலும் பல இடங்களிலும் மண் சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் அதீதமான கனமழை கொட்டுவதால் பெரும்பாலான சுற்றுலா தலங்களையும் சில நாட்களுக்கு மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் ஒரு மாதமாக இடைவிடாமல் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. கடந்த சில நாட்களாக ஒரே இடத்தில் 20 முதல் 37 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. இதனால் மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பயங்கர ஆக்ரோஷத்துடன் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாத மழையால் பயங்கரமான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

வயநாடு பயங்கர நிலச்சரிவு: வயநாடு மலைப் பகுதியில் சூரல்மலை, முண்டகக்கை பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுக்கள், தீயணைப்புத் துறையினர், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் என அனைத்து தரப்பும் இணைந்து வயநாடு மலைப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வயநாடு பெருந்துயரம்: வயநாடு மலைப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள்னர். 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3000-க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாய்ந்தோடிய காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற 36 உடல்கள் சாலியாறு ஆற்றில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன. ஒட்டுமொத்த நாட்டையே இந்த பெருந்துயரம் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவின் மற்றொரு சுற்றுலா மலைப்பிரதேசமான மூணாறும் மிக கடுமையாக மண் சரிவு, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூணாறில் கொட்டித் தீர்த்த கனமழையால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- போடிமெட்டு சாலையில் கேப்ரோடு என்கிற இடத்தில் பெரும் பாறைகள் உருண்டு விழுந்தன. அங்கு பெரும் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு, மணி சரிவு ஏற்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்லவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

மூணாறு அருகே சிவன்மலை எஸ்டேட் பகுதியில் கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நாகர் மலை, சிவன்முடி மலைப் பகுதிகளில் சாலைப் போக்குவரத்து இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. மறையூர்- உடுமலைப்பேட்டை சாலையில் கன்னிமலை எஸ்டேட், பள்ளிவாசல், தேவிகுளம் சாலையில் பொட்டானிக்கல் கார்டன் உள்ளிட்ட இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே கேரளா மாநில அரசு பெரும்பாலான சுற்றுலா தலங்களையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. தொடரும் கனமழை, நிலச்சரிவு, மண்சரிவு ஆகியவற்றால் எர்ணாகுளம், திரிச்சூர், கோட்டயம், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி என பெரும்பாலான சுற்றுலா தலங்களையும் அடுத்த சில நாட்களுக்கு மூடுவதற்கு கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பாதைகளில் ஏற்பட்டிருக்கும் மண்சரிவு, நிலச்சரிவுகள் அகற்றப்பட்டு, மழை சற்று ஓய்ந்த பின்னர் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட உள்ளன.