கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடம் கொடுக்க மாட்டோம் என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜமாத் அமைப்பினர் சென்று பார்வையிட்டனர். மேலும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் அவர்கள் சென்றனர்.
அங்கு அவர்களை கோயில் நிர்வாகிகளும் பூசாரியும் அன்பாக வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். கோயிலில் அமர்ந்து இரு தரப்பினரும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜமாத் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தால் இங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் இந்த கோட்டை மேடு பகுதியில் 7 தலைமறைகளாக வாழ்ந்து வருகிறோம்.
சங்கமேஸ்வரர் கோயில் எனப்படும் கோட்டை ஈஸ்வரன் கோயில், அந்த தெருவில் உள்ள மசூதி, இந்த பகுதிகளை சுற்றியுள்ள மக்கள் ஒற்றுமையோடு அண்ணன் தம்பிகள் போல் வாழ்கிறோம். நாங்கள் எப்போதும் அமைதியை போதிக்கிறோம். சிறுபான்மையின சமூகத்தினர் பெரும்பான்மை சமூகத்துடன் இணக்கமாக வாழவே விரும்புகிறோம்.
மத நல்லிணக்கம் பேணுவதற்காக ஜமாத் அமைப்பினர் ஒன்றிணைந்து வர்த்தக ரீதியில் நல திட்டங்களையும் செய்து வருகிறோம். மத பூசலுக்கு இங்கு இடம் இருக்காது. மத அமைதிக்கு கோவையை முன்னுதாரணமாக மாற்றுவோம். எந்த பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம்.
ஈஸ்வரன் கோயில் தேர் நடக்கும் போது நாங்கள் கடைகளை மூடி ஒத்துழைப்பு கொடுத்ததையும் எங்கள் ஜமாத் விழாக்களின் போது மற்ற சமூக மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததையும் கோயில் நிர்வாகிகளும் நாங்களும் பரஸ்பரம் நினைவுக் கூர்ந்தோம். மக்கள் அமைதியாக வாழ ஆக்கப்பூர்வ பணிகளை செய்வோம் என ஜமாத் அமைப்பினர் தெரிவித்தனர்.