சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமைதான்- வானதி சீனிவாசன் பேட்டி..!

சென்னை: தமிழக பாஜக சார்பில் தென் சென்னை மக்களவை தொகுதிக்கான பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.

அந்த வகையில், வேளச்சேரி நெடுஞ்சாலை ரயில் நிலையம் எதிரே உள்ள தேர்தல் அலுவலகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன உள்பட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:

தேர்தல் பணிகளை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு, இந்த தேர்தல் அலுவலகம் மிக முக்கிய பங்குவகிக்கும். நாடு முழுவதும் 1 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் கட்சியின் கொள்கைகள், அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காக மிகப்பெரிய தொடர்பு இயக்கம் அடுத்தமாதம் தொடங்க இருக்கிறது.

தமிழகத்திலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பிரதமரின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறுவார்கள். இதனைத் தொடர்ந்து, ‘கிராமத்துக்கு செல்வோம்’ என்ற அடுத்த தொடர்பு இயக்கத்தையும் கட்சி அறிவித்திருக்கிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிராமங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அங்கு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை வரும் பிப்ரவரி மாதம் தொடங்குகிறோம்.

இண்டியா கூட்டணிக்கு புள்ளி வைத்த, நிதிஷ்குமார், தேசிய ஜனநாயககூட்டணிக்கு வந்திருக்கிறார். கடந்த10 நாட்களில் இண்டியா கூட்டணியில்இருக்கும் தலைவர்கள் எல்லாம், எப்படி பிரிந்து சென்றிருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இண்டியா கூட்டணி என்பது அவர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டது என்றும், இந்த கூட்டணி நிலைக்காது என்றும் ஆரம்பம் முதல் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

மக்களின் நலனை சிந்திக்காத கூட்டணி இப்போது சிதறிக் கொண்டிருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒவ்வொரு நாளும் புதிய உறவுகளை, புதிய கட்சிகளை சேர்த்துக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலுக்குள் இண்டியா கூட்டணியில் உள்ள பல தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பாஜகவின் கொள்கைக்கு எதிராக நிற்கக் கூடியவர்களும், எதிர் கருத்து உடையவர்களும், கேலி செய்வதற்கும், இழிவுபடுத்துவதற்கும் `சங்கி’ என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். வெகு நாட்களாகவே இதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் சங்கியாக இருப்பதற்கு பெருமைப்படுவதாக சொல்கிறார்கள்.

அதனால், சங்கி என்ற வார்த்தைக்கு விளக்கம் எங்களால் கொடுக்க முடியாது. எங்களை பொருத்தவரை, இந்தநாட்டை நேசிக்கின்ற, நாட்டின் நலன்களை சமரசம் செய்து கொள்ளாத யாராகஇருந்தாலும், அவர்களை இந்திய நாட்டின் குடிமக்கள் சங்கி என்று சொல்வதை பெருமையாக கருதுவோம். இவ்வாறு அவர் கூறினார்.