பாபர் மசூதி போல அவுரங்கசீப் கல்லறையை இடித்து தரைமட்டமாக்குவோம் – இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்..!

மும்பை: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை அயோத்தி பாபர் மசூதி போல இடித்து தரைமட்டமாக்குவோம் என இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருவதால் மகாராஷ்டிராவில் உள்ள அந்த கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாமியர்களின் புனித நூல் தீ வைத்து எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பயங்கர வன்முறை வெடித்து பலர் படுகாயமடைந்தனர். இன்று நாக்பூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி 1992-ம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அந்த இடத்தில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல நாட்டின் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றன.

தற்போது மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை மையமாக வைத்து பெரும் சர்ச்சையும் போராட்டங்களும் வெடித்துள்ளன. மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி, அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது. இதனால் மகாராஷ்டிரா சட்டசபையில் இருந்து அபு ஆஸ்மி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து இந்துத்துவா அமைப்புகள் குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தன. மகாராஷ்டிரா மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இந்தப் போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடமும் மனுக்களை வழங்கின இந்துத்துவா அமைப்புகள். இதனையடுத்து குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூர் நகரிலும் நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் தீவிரப் போராட்டங்களை நடத்தினர். நாக்பூர் மகால் பகுதியில், சிவாஜி சிலை அருகே போராட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்பினர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்துவிட்டதாக வதந்தி பரவியது.

இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவியது. இதனையடுத்து நாக்பூர் நகரில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாக ஒன்று கூடி கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்துத்துவா அமைப்பினரும் இஸ்லாமியர்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போது திடீரென வன்முறை சம்பவங்களும் வெடித்தன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சரமாரி கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் நாக்பூர் நகரமே பற்றி எரிவதாக காட்சி தந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதனால் நாக்பூர் நகரமே போர்க்களமாக உருமாறியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த இந்துத்துவா அமைப்பினர், அவுரங்கசீப் உருவ பொம்மையைத்தான் எரித்தோம்; இஸ்லாமியர்களின் புனித நூலை எரிக்கவில்லை என்றனர். இந்த நிலையில் நாக்பூர் நகரில் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாக்பூர் வன்முறைச் சமபங்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகலாயப் பேரரசரான அவுரங்கசீப், இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் சீக்கியர்களின் மதகுருவான குருகோவிந்த் சிங்கின் 2 மகன்களை படுகொலை செய்தார்; மராத்திய மன்னர் சிவாஜியின் மகனை சித்திரவதை செய்து படுகொலை செய்தார்; காசி, மதுரா, சோம்நாத்தில் உள்ள இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாக்கப்பட்டன; ஆகையால் அவுரங்கசீப் கல்லறை என்பது இந்துக்களுக்கு அவமானம்; அடிமையின் சின்னம் என்பதால் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்கின்றனர் இந்துத்துவா அமைப்பினர்.