தொழிற்பூங்கா அமைக்க அனுமதிக்க மாட்டோம்- அன்னூர் விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு..!

கோவை: அன்னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க அரசு நிலங்களை கைகப்படுத்தும் என்று அறிவித்தது. இதற்கு அன்னூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விவசாயிகளின் நிலம் அவர்களது அனுமதி இல்லாமல் எடுக்கப்படாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். இதனிடையே நமது நிலம் நமது போராட்டக்குழு தலைவர் குமார் ரவிக்குமார் மற்றும் செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
எங்கள் கருத்து ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்து. விவசாயிளின் நிலங்கள் எடுக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். அதற்கு நன்றி. ஆனால் இன்னும் முழுமை பெறவில்லை. அங்கு தொழிற்சாலைகளோ தொழிற்பூங்காவோ வரக்கூடாது. விவசாய நிலங்களை பாதுகாக்க அன்னூர் உட்பட இரண்டு வட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப்பெறுவதுடன், வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. விவசாயத்திற்கு நிலங்களை வாங்குவதாக கூறி பெங்களூரை சேர்ந்த நிறுவனம் 1200 ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளார்கள்.
அவை உறுதியாக சதுரமாகவோ அல்லது ஒரே இடத்திலோ அமையவில்லை. இரண்டு இடங்களில் மட்டும் 100 ஏக்கர் உள்ளது. மற்றவை எங்கள் இடங்களை சுற்றி பரவலாக உள்ளது. அதனால் அங்கு தொழிற்சாலை அமைக்க சாத்தியமில்லை. 1200 ஏக்கரில் 200 ஏக்கர் நிலங்களை அந்த நிறுவனத்தினர் விற்றுவிட்டனர். ஏற்கனவே பிரிமியர் மில்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். அதன் மூலம் தொழிற்சாலை அமைக்கும் முடிவை கைவிடப்பட்டது. சம்மந்தப்பட்ட மக்களின் ஒப்புதலோடு தான் ஒரு பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நிலத்தை அரசு கையகப்படுத்தும் என்பது சாத்தியமல்ல. எனவே போராட்டத்தை தொடர்கிறோம்.
ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. புதிய தொழிற்சாலைகள் வேண்டாம். அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ இந்த மண்ணில் தொழிற்சாலைகளை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
இங்கு தொழிற்பூங்கா கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே அன்னூர் அருகே காஸ்டிங் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் ஆடுகள் பலியாகின. அப்போது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அண்ணாமலை உட்பட அதிமுக, நாம் தமிழர், மார்கிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன. அண்ணாமலைக்கும் எங்களுக்கும் முடிச்சு போட வேண்டாம். ராசாவுக்கும், அண்ணாமலைக்கும் இருக்கும் பிரச்சனை அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. எங்கள் பிரச்சனை அல்ல. அரசியல் கட்சிகள் சார்ந்து யாரும் செயல்படவில்லை.
3800 ஏக்கர் நிலத்தில் 100 ஏக்கர் நிலம் அரசின் நிலமாக உள்ளது. விவசயிகள் நிலம் 2600 ஏக்கர் உள்ளது. 1000 தனி நிறுவனத்தை சேர்ந்தது. இங்கு தரிசு நிலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேய்ச்சலுக்காக விடும் நிலங்களை தரிசு நிலம் என்று அரசு வரையறுக்க முயற்சிக்கிறது. தொற்சாலை அமைக்க வந்தால் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.