சென்னை: ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது உண்மை என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்து உள்ளார்.
பாஜக தரப்பில் உங்களிடம் யாராவது பேச்சு வார்த்தை நடத்தினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “கடந்த ஒரு மாதமாக பாஜக மத்திய தலைமையிலிருந்து தினமும் பேசி வருகிறார்கள்.” என்றார். கூட்டணிக்கு தலைமையேற்பது யார் என்ற கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த அவர், “நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். தேசிய அளவில் இயக்கத்தை நடத்துபவர்களே இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் நிலவுகிறது. பாஜக 2 முறை ஆண்டு இருக்கிறார்கள். 3 வது முறை ஆளும் சூழலும் உள்ளது. அவர்கள் முடிவை அறிவித்த பின் எங்கள் முடிவை அறிவிக்கிறோம். தேசிய கட்சியின் மாநில தலைவரை மாற்ற சொல்ல அவருக்கு என்ன அருகதை உள்ளது.” என பதிலளித்தார்.
அப்போது பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை முன்வைத்த விமர்சனம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமசந்திரன், “அண்ணாவையும் ஜெயலலிதாவையும் அண்ணாமலை விமர்சனம் செய்தார். 1956 ல் அறிஞர் அண்ணா மதுரையில் பி.டி. ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பகுத்தறிவை பேசினார்.
முத்துராமலிங்க தேவர் அவர்கள் அடுத்தநாள் ஆன்மீக கருத்தை வலியுறுத்தி அண்ணாவை மறுத்து பேசினார். அடுத்து அண்ணாவின் பொதுக்கூட்டம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அண்ணா, முத்துராமலிங்க தேவரை தாக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், முத்துராமலிங்க தேவரை பற்றி ஒரு மணி நேர உரையில் அண்ணா பேசவே இல்லை. ஏனென்றால் அறிஞர் அண்ணா பகையை வளர்க்க விரும்பியதே இல்லை. இதுதான் நடந்தது. மறைந்த தலைவர்கள் பற்றி சரியான தகவலை சொல்ல வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன தகவல் தவறு.
ஆனால், உள்நோக்கத்தோடு சொன்னார் என்று சொல்ல நான் தயார் இல்லை. இந்த பிரச்சனை அறிஞர் அண்ணாவால் வரவில்லை. அண்ணா பற்றி விமர்சித்த பிரச்சனையை 4 நாள் கழித்து கிளப்புகிறார்கள். திருட்டு போய் 4 நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்றால் நாயை வைத்துக் கொள்ள முடியுமா?
விசயம் என்ன என்றால், அண்ணா பற்றி பேசிய பிறகு அண்ணாமலை வேறு தகவலை சொன்னார். 2026 தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாங்கள் பி டீம் இல்லை; சீ டீம் இல்லை; நாங்களே வருவோம் என்றார். அதுதான் பிரச்சனை. அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி விழித்துக்கொண்டு நான் மாப்பிள்ளை இல்லை என்று எண்ணி பிரச்சனை செய்தார்.
அண்ணா, ஜெயலலிதா பற்றி பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சனையே இல்லை. 2026ல் தன்னை முதலமைச்சராக பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பிரச்சனை. தான் முதலமைச்சராக வேண்டும் என்பதே அவரது பிரச்சனை. அண்ணாவையும் ஜெயலலிதாவையும் சொல்லி திசை திருப்புகிறார்கள்.” என்றார்.
ஜெயலலிதா பற்றி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினாரே என்று செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “அது உண்மை. அவர் முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள் என்பது உண்மை. அது பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு. கடவுளையே குறை சொல்லும் நாடு.
அவர் ஊழல் குற்றவாளி என்பதை நீங்கள் ஏற்கவில்லை, நாங்கள் ஏற்கவில்லை என்பது இல்லை. ஆனால், அது உண்மை. அந்த தீர்பை நாங்கள் ஏற்கவில்லை. அந்த தீர்ப்பு சரியாக வரவில்லை என்பது என் கருத்து.” என்றார்..