உத்தர பிரதேச சட்டசபையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் இன்று முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி சட்டசபையில் எம்எல்ஏக்கள் செல்போன் கொண்டு செல்லவும், ஆவணங்களை கிழிக்கவும், சத்தமாக சிரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. உத்தர பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் தற்போது உத்தர பிரதேசத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் சட்டசபையில் புதிய விதிகளை கொண்டு வருவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கான நடைமுறை மற்றும் நடத்தை விதிகளை அது உள்ளடக்கி உள்ளது.
இதன் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் தற்போது பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் இந்த புதிய விதிமுறை தொடர்பான அம்சம் நிறைவேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இன்று கொண்டு வரும் புதிய விதிமுறைகள் தொடர்பான முக்கிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது இன்று சட்டசபையில் இந்த விதிகள் தொடர்பான அம்சம் நிறைவேறும்பட்சத்தில் எம்எல்ஏக்கள் தங்களின் செல்போனை சட்டசபைக்குள் கொண்டு செல்ல முடியாது. அதோடு விவாதத்தின்போது ஆவணங்களை கிழிக்க முடியாது. மேலும் சபாநாயகரை நோக்கி முதுகை காட்டியபடி நின்றோ, அமர்ந்தோ ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்ய முடியாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் உரை நிகழ்த்தும்போது எம்எல்ஏக்கள் யாரையும் சுட்டிக்காட்டி பேசவும், அவர்களை பாராட்டவும் முடியாதாம். அதோடு எந்த காரணத்தை கொண்டும் ஆயுதங்களை காண்பிக்க முடியாது. மேலும் சட்டசபை கூட்டத்தொடரின்போது சத்தமாக பேசவோ, சிரிக்கவும் முடியாது. அதோடு சபைக்குள் நுழைந்தவுடன் சபாநாயகரை கும்பிட்டு மரியாதை செய்ய வேண்டும். சபையில் இருந்து நுழையும்போதோ, இருக்கையில் இருந்து எழுந்து செல்லும்போதோ முதுகை காட்டியபடி செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் தற்போது அமலில் இருக்கும் விதியின்படி சட்டசபை குறைந்தபட்சம் 14 நாட்கள் கூட்ட வேண்டும் என்பது செயல்பாட்டில் உள்ளது. இதனை 7 நாட்களாக குறைக்கவும் இந்த புதிய விதி வழிவகுக்கிறது. மேலும் புத்தகம், பத்திரிகைகளில் வெளியாகும் கருத்து அம்சங்களை எடுத்து செல்லவும், அதனை சட்டசபையில் வினியோகம் செய்யவும் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் சட்டசபை கூடும் வேளையில் சட்டசபையின் முதன்மை செயலாளர் எம்எல்ஏக்களுக்கு அன்றயை சபை நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை ஆன்லைன் அல்லது ஆப்லைனில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனவும் இந்த விதிகள் கூறுகின்றன. முன்னதாக கடந்த டிசம்பரில் நடந்த கூட்டத்தொடரின்போது சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ அதுல் பிரதான் ராம்பூர் இடைத்தேர்தல் தொடர்பாக போராட்டம் நடத்தினார். அப்போது அவர் சட்டசபை நிகழ்வுகளை பேஸ்புக்கில் நேரலை செய்தார். இந்நிலையில் தான் தற்போது புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுபற்றி உத்தர பிரதேச மாநில சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா கூறுகையில், ”உத்தர பிரதேச மாநில சட்டசபையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 1958 ல் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்று நடத்தப்பட்டு சட்டசபை நடைமுறைகள் மற்றும் நடத்தை விதிகள் 2023 என்பது அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது” என்றார்.