அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..’
என பாட்டுப்பாடி அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஏ.வ.வேலு ,அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது..
காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தமிழகத்தின் முதல் விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அனைத்து வித விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில்
மாணவர்கள் தங்கி படிப்பதற்கு தேவையான தங்கும் விடுதிகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ‘ என்னதான் நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்றார். இது பழிவாங்கும் நடவடிக்கையா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘ என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே ‘ என பாடலாக பாடி அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.