உதவிபெற்ற மக்கள் எங்கே போனார்கள்..? ஒன்றுமே புரியவில்லை – ஜெகன் மோகன் ரெட்டி..!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாக அமராவதியில் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது:

தேர்தல் முடிவுகள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மக்கள் நலனை விரும்பினேன். நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தினேன். 53 லட்சம் தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டு தோறும் தலா ரூ.15,000 வீதம் வழங்கினேன். அவர்கள் எதற்காக வாக்களிக்கவில்லை என்று புரியவில்லை. 26 லட்சம் முதியோர், மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கினேன்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உதவினேன். ஆங்கிலவழி கல்வியை அரசு பள்ளிகளில் அறிமுகப் படுத்தினேன். விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு இந்த அரசு உதவியது. இவர்கள் என் மீது வைத்திருந்த அன்பு என்னவானது? உதவிபெற்ற மக்கள் எங்கே போனார்கள்? ஒன்றுமே புரியவில்லை. ஆனால், மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன்.

எது நடந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். வெற்றிபெற்ற சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.