யாரை ஏமாத்துறீங்க..? அதிமுக செயலாளர்கள் கூட்டத்தில் கடுகடுத்த எடப்பாடி..!!

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின்போது, பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்தோடு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதை அடுத்து சட்டமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது அதிமுக. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் அண்மையில் விருந்து அளித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து, பூத் கமிட்டி தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 82 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் பங்கேற்று இந்தக் கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். மே 15-ஆம் தேதிக்குள் பூத் கமிட்டியை அமைத்து தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 68,144 பூத்களுக்கும் தலா 3 மகளிர் உள்ளிட்ட தலா 9 நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டிலிருந்தே கூறி வருகிறேன். இந்தப் பணியை வலுப்படுத்துவதற்காகவே கட்சி ரீதியிலான 88 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்தேன்.

மார்ச் 31-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். ஆனாகும், நேற்று நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மாவட்ட பொறுப்பாளர் கூட 100 சதவீதம் பணிகளை முடித்ததாக தெரிவிக்கவில்லை என ஆதங்கத்தோடு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றிக்கு பூத் கிளை வலிமை முக்கியம். பூத் கிளை வலிமையாக இருந்தால்தான் அதிமுகவால் 2026 ல் ஆட்சியை பிடிக்க முடியும். யாரை ஏமாற்றுகிறீர்கள்? பணிகளில் அலட்சியமாக இருந்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். வரும் தேர்தல் நமக்கு சாதகமாக உள்ளது. திமுக மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜகவும் சேர்ந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளன. நிச்சயம் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.

கடந்த தேர்தலில வெறும் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம். அதில் கவனம் செலுத்தினாலே ஆட்சியை பிடித்துவிடலாம். இதை மனதில் வைத்து, மாவட்ட செயலாளர்கள் உற்சாகமாக பணியாற்ற வேண்டும். இன்று முதலே உங்கள் தொகுதிகளில் கட்சி பணியை தேர்தல் பணியாக மேற்கொள்ள வேண்டும். பூத் கிளை நிர்வாகிகள் நியமனத்தை மே 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.