தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? தொடங்கியது ரேஸில் 12 பேர்… டாப் லிஸ்டில் 5 பேர்.. ஸ்டாலின் பார்வை யார் பக்கம்..!

சென்னை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெறுகிறார்.

அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ள நிலையில், டிஜிபி ரேஸில் இருக்கும் மொத்தம் 12 பேர் உள்ளதாகவும், அதில் ஐந்து பேர் டாப் இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக காவல்துறையில் உச்சபட்ச பதவி என்றால் டிஜிபி தான். தமிழ்நாட்டை பொறுத்தவரை காவல்துறையில் தலைமை இயக்குனர் என்ற பொறுப்பு என்றெல்லாம் கிடையாது. அதேநேரம் தமிழக காவல்துறையில் டிஜிபிக்களாகவும் கூடுதல் டிஜிபிக்களாகவும் சிலர் இருக்கிறார்கள். அதேநேரம் அதில் சட்டம் ஒழுங்கு டிஜிபி மட்டும் உச்சபட்டச தலைமை பொறுப்பில் உள்ளவர் ஆவார். அவருக்கு கீழ் தான் தமிழக காவல்துறையின் அனைத்து பிரிவுகளும் இருக்கும். அவரே தமிழக காவல்துறையின் தலைவரும் ஆவார்.

அந்த வகையில் தமிழக காவல்துறை டிஜிபியாக திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த உடனே சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார். அவர் இந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பின் தமிழக டிஜிபியாக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொதுவாக நாட்டின் எந்த மாநிலத்தின் டிஜிபியையும், மத்திய அரசின் கீழ் செயல்படுகின்ற மத்திய பணியாளர் தேர்வாணைய குழு தான் முடிவு செய்கிறது. அதேநேரம் மாநில அரசுகள் பரிந்துரைக்கலாம். காவல்துறையில் பணியில் சேர்ந்த வருடம், பணியாற்றிய காலம், பணியில் நிபுணத்துவம் என்ற அடிப்படையில், 3 முதல் 5 அதிகாரிகளின் பெயர்கள் மத்திய பணியாளர் தேர்வாணைய குழுவிற்கு, மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

அந்த 5 பேரில் சிறந்த அதிகாரிகளாக 3 அதிகாரிகளின் பெயர்களை, மத்திய தேர்வாணைய குழுவும் மாநில அரசுக்கு பரிந்துரைக்கும்.

இந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே 3 அதிகாரிகளில் ஒருவரை, மாநில அரசு தேர்வு செய்து, அவரை டிஜிபியாக அறிவிப்பது இந்தியாவில் நடைமுறையாக உள்ளது. டிஜிபியை தேர்ந்தெடுப்பதில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலும் பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒரு மாநிலத்தின் டிஜிபியாக நியமிக்கப்படுபவர்கள், 2 ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருப்பார்கள்.

இந்நிலையில் மாநில அரசுகள் விரும்பினால் அவர்கள் ஓய்வு பெறும்நாளில் பணி நீட்டிப்பு வழங்கி 2 ஆண்டுகள் வரை அவரை டிஜிபியாக பணியாற்ற வைக்கலாம்.

கடந்த 2012ம் ஆண்டுக்கு முன்னர் வரை, மாநிலத்தின் டிஜிபியை தேர்வு செய்யும் முறையில், ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு பிடித்த அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளன்று, அவர்களை டிஜிபியாக நியமித்து, அதன் மூலம் மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும் வகையில் செயல்பட்டு வந்தன. கடந்த அதிமுக ஆட்சியில் அப்படித்தான் நடந்தது. கடைசியாக ராமனுஜம் டிஜிபியாக பணி நீட்டிப்பு பெற்றிருந்தார்.

இப்படி செய்வதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் டிஜிபி தேர்வு தொடர்பாக புதிய வழிகாட்டுதல் முறையை வெளியிட்டது. அதன்படி, டிஜிபியாக நியமிக்கப்படுபவர், ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பணிக்காலம் இருக்க வேண்டும் என அறிவித்தது. இதன்படியே டிஜிபிக்கள் தேர்வு இந்தியாவில் நடந்து வருகிறது.

இதனிடையே, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணியினை மத்திய தேர்வாணைய குழு செய்து வருகிறது. தமிழகத்தின் அடுத்த டிஜிபிக்கான பட்டியலில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் ரேஸில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் முதலிடத்தில், டெல்லி மாநகர காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோராவ இருக்கிறார். 2வது இடத்தில் தமிழக ஊர்க்காவல் படை டிஜிபி பி கே ரவியும், மூன்றாவது இடத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் இருக்கிறார். இதில் 4வது இடத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டிஜிபி ஏகே விஸ்வநாதனும், ஐந்தாவது இடத்தில் தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமாரும் உள்ளாராம்.

அதற்கு அடுத்தபடியாக மத்திய உளவுத்துறையின் தென்மண்டல இயக்குனர், டிஜிபி ரவிச்சந்திரன், சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் டிஜிபி சீமா அகர்வால், தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ்பூஜாரி, இந்தோ திபெத் எல்லை படை, டிஜிபி ராஜீவ் குமார் போலீஸ் காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபி அபய்குமார் சிங், மின் வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள் என மொத்தம் 12 பேர் சட்டம் ஒழுங்கு டிஜிபி ரேஸ் பட்டியலில் இருக்கிறார்கள்.

தமிழக அரசு ஐந்து பேரின் பெயரை ஏற்கனவே பரிந்துரைத்து அனுப்பி இருக்கும். அதில் 3 பேரின் பெயரைத்தான் மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யும். அதில் ஒருவரைத்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்து அறிவிப்பார். அந்த ஒருவர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.