பொங்கல் தொகுப்பில் சேருகிறது முழு கரும்பு – முதல்வர் அறிவிப்பு..!

1000 ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடம் இருந்து அரசிடம் கோரிக்கைகள் எழுந்தது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (டிச. 28) ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்ந்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலசோனைக்கு பின் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 9ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணி ஜனவரி 3இல் இருந்து ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், நிர்வளத் துறை அமைச்சர் துரைமுருகள், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ளான், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் சி. சமயமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரும்பை பொங்கல் பரிசுத்தொகுப்பில் சேர்க்க வேண்டி பல்வேறு கரும்பு விவசாய அமைப்புகள் அரசுக்கு தொடர் கோரிக்கையை வைத்து வந்தன. தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் கரும்பை தொகுப்பில் சேர்க்க வலியுறுத்தி வந்தனர்.

மேலும், ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகையை ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிவைக்க இருந்த தேதியில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். போராட்ட அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரும்பை தொகுப்பில் சேர்க்கப்பட்டது குறஇப்பிடத்தக்கது.