கடந்த 2014ஆம் ஆண்டு நீங்கள் ஆட்சிக்கு வரும்போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 58 ரூபாய் 47 பைசாவாக இருந்தது. இப்போது 2025ஆம் ஆண்டு 87 ரூபாய் 99 பைசாவாக ஆகிவிட்டது. இதுதான் இந்தியாவிற்கான வளர்ச்சியா?. அமெரிக்கப் பொருள்கள் மேல் விதிக்கும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டார்கள் என்று, அந்த நாட்டின் அதிபர் வெளிப்படையாகப் பேட்டி அளித்திருக்கிறார். இது அவமானம் இல்லையா?. இந்தியாவிற்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் இதுதானா? இந்தியாவின் மதிப்பை உயர்த்த நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?. இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிகிறது. 250 பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகூட வன்முறை நடந்திருக்கிறது. இதைத் தடுக்க சிறு துரும்பளவு கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார் என்று சொன்னவர் மோடி. அவருடைய பத்தாண்டு கால ஆட்சியில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஆண்டு மட்டும் 550 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு மாதத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டார்கள். சிறிய நாடான இலங்கை கூட உங்களை மதிக்கலையே, இதுதான் உங்களுடைய பரிதாபங்கள். அதனால்தான் அதல பாதாளத்திற்கு இந்தியா இறங்கிக் கொண்டு இருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் தி.மு.க.விற்கு இருக்கிறது.
‘இந்தியாவில் மக்களாட்சியைக் காக்கும் முன்னணிப் படையாக திமுக திகழும்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே. அத்தகைய முன்னணிப் படையாக நாம் செயல்படுவோம். அதற்கு எடுத்துக்காட்டு, நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ஊடகங்களில் பார்த்தீர்கள் என்றால், இப்போது வரைக்கும் தமிழ்நாட்டைப் பற்றிதான் அனைத்து ஒன்றிய அமைச்சர்களும் பேசுகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, நீங்கள் நாள்தோறும் வசைபாடினாலும், தமிழ்நாடு தொடர்ந்து போராடும். தமிழ்நாடு இறுதிவரை போராடும். தமிழ்நாடு இறுதியில் வெல்லும்” எனப் பேசினார்.