குடிபோதையில் வீட்டுக்கு லேட்டா வந்த கணவன் மீது மனைவி தாக்குதல்: காயத்துடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவர் மீது வழக்கு பதிவு
கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ஓட்டிச் சென்று வழக்கில் சிக்கி காரை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
அரை டவுசரோடு டேபிள் மீது கையூன்றி சாய்ந்து கொண்டு காவல் ஆய்வாளரின் நேம் பேட்சை குறு குறுவென உற்றுப் பார்க்கும் இவர் தான், மனைவி மீது புகார் அளிக்கச் சென்று வாண்டடாக போதை வழக்கில் சிக்கிக் கொண்ட பழனிச்சாமி மகன் பன்னீர்செலவம்.
சூலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் உள்ளிட்ட போலீசார் இரவு பணியில் இருந்த போது சூலூர் காவல் நிலைய வளாகத்திற்குள் அதிவேகமாக கார் ஒன்று வந்து நின்றது. இந்த வாகனத்திலிருந்த போதை ஆசாமி ஒருவர் தள்ளாடிய படியே இறங்கி வந்தார்.
உங்களால் நிற்கவே முடியவில்லையே… எதற்காக வாகனத்தை இவ்வளவு வேகமாக ஓட்டி வந்தீர்கள் ? என காவல் ஆய்வாளர் மாதையன் போதை ஆசாமியிடம் கேட்டார். அங்குள்ள இருக்கையில் அமருமாறு கூறியதற்கு நான் ஒரு பிரபல அமைச்சரின் உறவினர் என கூறி செல்போனில் யாரிடமோ பேசிய அவர், கீழே விழுந்து விடாமல் இருக்க மேஜை மீது கையூன்றி தவழ்ந்தவாறு காவல் ஆய்வாளரின் பெயரை அருகில் சென்று குறு குறுவென உற்றுப் பார்த்தார்.
அப்படி என்ன தெரிகிறது ? என்று கேட்டதற்கு கூறியதையே திரும்பத் திரும்ப கூறினார் அந்த போதை ஆசாமி . விசாரணையில் அவர் சூலூர் ராஜூ லே அவுட் பகுதியை சேர்ந்த கே.பி. பன்னீர் செல்வம் என்பதும் போதையில் வீட்டுக்கு தாமதமாக சென்றதால் மனைவியிடம் மாத்து வாங்கிக் கொண்டு காவல் நிலையத்தை நாடி வந்திருப்பதும் தெரியவந்தது.
தள்ளாடிக் கொண்டும் .. உளரிக் கொண்டும் சுற்றிய பன்னீர் செல்வத்தை மடக்கிப் பிடித்து போதை கண்டறியும் பிரீத் அனலைசரில் ஊதச் சொன்னதும், தரமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த அவர் என்னங்கண்ணா என்னைய போய் ஊதச் சொல்லிக்கிட்டு… என்று கொங்கு தமிழில் பேசி போலீசுக்கே நுங்கு கொடுக்கப் பார்த்தார்
ஊத முடியாது என அடம் பிடித்த பன்னீரிடம் பக்குவமாக பேசி ஊத வைத்த போலீசார், அவர் குடி போதையில் வாகனம் ஓட்டியதை உறுதி செய்து, போதையில் வாகனத்தை ஒட்டியதாக வழக்கு பதிவு செய்ததோடு, அண்ணார் அதிவேகத்தில் அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
பொண்டாட்டியுடன் சண்டை போட்டு விட்டு புகார் அளிக்க காரில் தவுளத்தாக வந்திறங்கிய பன்னீரின்
காரை போலீசார் பறிமுதல் செய்ததால், பட்டதெல்லாம் போதும் பன்னீரு என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு பொடி நடையாக வீட்டுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் பன்னீர் செல்வம். தண்ணீரில் வந்த பன்னீரின் பரிதாப நிலையே சாட்சி..