காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி – இருவர் படுகாயம்..

கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள போளுவாம்பட்டி வனச்சரகம், நரசிபுரம் பிரிவில் விராலியூர் பெருமாள் கோவில் அருகே கோவிலுக்கு செல்வதற்கு நடந்து சென்ற பூசாரி பாஸ்கரன் (வயது 55) என்பவரை ஒற்றை யானை தாக்கியது. இதில் அவரது 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது. அவரை வனத்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் மீண்டும் ஊருக்குள் வந்த ஒற்றைகாட்டு யானை விராலியூர் இந்திரா காலனியை சேர்ந்த கார்த்தி (வயது 24) கணுவாய் ஹரிஷ் (வயது 22) ஆகியோரை துரத்தியது. இருவரும் ஓடினார்கள். விராலியூர் புளிய மரத்துபள்ளம் அருகில் வைத்து துரத்திச் சென்று தாக்கியதில் கார்த்திக் வலது கை, இடது தொடை முகத்தில் இரத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். ஹரிசுக்கு வலது கையில் எலும்பு முறிவு  ஏற்பட்டது. வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டி அடித்தனர்..படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார்த்திக் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.