மருதமலையில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம..!

கோவை அருகே உள்ள மருதமலை மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு வந்தன.இதை அந்த வழியாக வாகனங்களில் வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளன. தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதிக்கு வந்த இந்த யானை கூட்டம் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது . மேலும் இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதபடுத்தி அரிசி ,புண்ணாக்கு உள்ளிட்ட உணவு பொருட்களை திண்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனி குடியிருப்பு பகுதிக்குள் இந்த காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது. தொடர்ந்து அந்த யானைகள் தெருவில் வைக்கப்பட்டிருந்த தொட்டியில் தண்ணீர் குடித்தன. சத்தம் கேட்டு வெளியே வந்து பொதுமக்கள் யானைகள் கூட்டத்தை கண்டு அச்சமடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து ஒலி எழுப்பி காட்டு யானைகளை வன பகுதிக்கு துரத்தினர். குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டமாக உலா வந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.