அமைச்சர் ஆகிறாரா..? டெல்லி பறந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

நேற்று அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பைத் தொடர்ந்து இன்று  வியாழக்கிழமை டெல்லி செல்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை..

எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து அண்ணாமலையிடம் அமித் ஷா விவரிக்க உள்ளதாகவும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.

பாஜகவுடன் கூட்டு சேர்வதில் மற்றவைகளை விட, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்த விவகாரம் அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது. ஆதலால் தான் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினால் தான் கூட்டணி என்று முன்னதாக அதிமுக தலைமை கூறியது.

நேற்று சந்திப்பு முடிந்த உடனேயே பாஜகவுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று பேசிய ஜெயலலிதாவின் வீடியோவும், பாஜகவால் தான் தோற்றேன் என்ற ஜெயக்குமார் பேச்சு வீடியோவும் சமூகத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலையின் பேச்சுக்கள், அவர் பாஜக தலைவராக நீடித்தால் அதிமுகவினரே கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீதான அவதூறுகளையும் தாங்கிக் கொண்டு அண்ணாமலை தலைமையை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்ற எதார்த்த நிலையை எடப்பாடி பழனிசாமி விளக்கிக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இரு தரப்பிற்கும் பாதகமில்லாதா முடிவு என்பதை ஆங்கிலத்தில் Win Win Situation என்பார்களே அதைப்போல், அண்ணாமலையை மாநிலத் தலைமையிலிருந்து நீக்குங்கள், அவர் பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி ஆவதற்கு அதிமுக ஆதரவு தரும் என்ற முடிவை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிட்டால் உடனடியாக அமைச்சர் பதவியும் கொடுத்து அண்ணாமலையின் கடந்த கால செயல்பாட்டிற்கு பரிசு கொடுத்ததாகவும் ஆகிவிடுகிறது, ஒன்றிய அமைச்சர் ஆன பிறகு அண்ணாமலை திமுக அரசுக்கு மேலும் கடுமையான குடைச்சல் கொடுப்பார், அது அதிமுக-பாஜக கூட்டணிக்கு சாதகமாக உருவாகும் என்பது தான் அமித் ஷா – எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்று தெரிகிறது.