நடிகர் விஜய் புதியதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தவெக கொடி ஒத்திகை நிகழ்வு நடந்து உள்ளது. இதில் நடிகர் விஜயின் உருவம் பொறித்த மஞ்சள் நிறக் கொடி ஏற்றப்பட்டு உள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். டுகொடி அறிமுக விழா சிறப்பாக நடைபெற வேண்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரதம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்த மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக நடிகர் விஜயின் பெயரை குறிக்கும் வகையில் ‘வாகை’ மலர் தவெக கொடியில் இடம் பெற்று இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார். ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்பட போவதாக தெரிவித்தார். அத்துடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாகவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் செயலி மூலமாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதற்கான சாவியை புஸ்ஸி ஆனந்த் பயனாளிகளுக்கு வழங்கி இருந்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.