லொக்கேஷனுக்கு வராத ஆத்திரத்தில் பெண் புகார்… உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கொளத்தூரில் சோகம்..!

பெரம்பூர்: லொக்கேஷனுக்கு வராத ஆத்திரத்தில் பெண் புகார் அளித்ததால் உணவு டெலிவரி வேலையை பகுதிநேரமாக செய்து வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொளத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் பவித்திரன் (21), வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் பி‌காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மகள் கோகிலா திருவண்ணாமலையில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதில் பவித்திரன் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி செய்யும் வேலையை பகுதி நேரமாக பார்த்து வந்துள்ளார்.

கடந்த 11ம் தேதி கொரட்டூர் ஏவிஎஸ் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது பவித்திரன் அந்த பெண் குறிப்பிட்ட லோக்கேஷனுக்குச் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததால் சுற்றி அலைந்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை தொடர்புகொண்டு கேட்டபோது, தற்போது எங்கள் வீட்டின் பின்புறத்தில் இருக்கிறாய், எனவே முன்பக்கம் வந்து உணவை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு பவித்திரன் நீங்கள் அனுப்பிய லோக்கேஷனில்தான் நிற்கிறேன், இங்கு வந்து உணவை வாங்கிச் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண், பவித்திரனை தகாத வார்த்தையில் திட்டியதோடு, உணவு டெலிவரி நிறுவனத்திற்கு புகார் அளித்ததால் பவித்திரனின் வேலை பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான பவித்திரன் கடந்த 13ம் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று கல்வீசி ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு வந்துள்ளார். அதன்பிறகு 15ம் தேதி வெளியூரில் இருந்து வந்த தனது கணவரிடம் அந்த பெண் நடந்தவற்றைக் கூற, உடனே அவரது கணவர் இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.‌ போலீசார் பவித்திரனை விசாரணைக்கு அழைத்துச் சென்று அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் மாணவன் என்பதால் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பவித்திரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பவித்திரன் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதில் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவித்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

‘இதுபோன்ற பெண்களால் பல மரணங்கள் நிகழும்’ உருக்கமான கடிதம் சிக்கியது
கல்லூரி மாணவன் பவித்திரன் தற்கொலை செய்யும் முன்பு எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், ”என் மரணத்திற்கு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் அவர்கள் என்னை கடும் வார்த்தையால் திட்டியதுதான் காரணம். இதுபோன்ற பெண்கள் இந்த உலகில் இருக்கும் வரை பல மரணங்கள் நிகழும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.