கோவை காந்திபுரம் பகுதியில் “WE AXIS OVERSEAS EDUCATION AND PLACEMENT” என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் சுகந்தி, சஞ்சய், கோகிலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து Al SARA GENERAL TRADE என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கமலக்கண்ணன். இவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். முதலில் துபாய்க்கு அனுப்பி விட்டு அங்கிருந்து வேலை பர்மீட் கொடுத்து ஐரோப்பாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து துபாய் செய்ய விசிட் விசா மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதற்காக பலரிடம் 30 லட்சத்திற்கும் மேல் பணத்தை பெற்றுள்ளனர்.
இதனை நம்பி துபாய் சென்ற நபர்களுக்கு பல நாட்கள் ஆகியும் வேலை பர்மிட் தராமல் இருந்துள்ளனர். இது குறித்து இவர்களை அனுப்பிய நிறுவனத்தினர்களிடம் கேட்ட நிலையில் அங்குள்ள மற்றொரு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் என கூறி உரிய பதிலளிக்காமல் செல்போனை சுவிட் ஆப் செய்துள்ளனர். இதனால் அவர்கள் ஐரோப்பாவிற்கும் செல்ல முடியாமல் கையில் இருந்த பணத்தை கொண்டு நாட்களை கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிலரது விசிட் விசாவின் நாட்களும் முடிந்ததால் துபாய் போலிசாரிடம் சிக்கி வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அங்குள்ள தமிழ் நண்பர்களிடம் பண உதவி பெற்று தற்போது கோவை திரும்பி உள்ளனர்.
இதனையடுத்து தற்போது அந்நிறுவனத்திடமிருந்து தங்களது பணத்தை பெற்று தருமாறும், அந்நிறுவனத்தினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தங்களை துபாயில் இருந்து ஐரோப்பிற்கு அனுப்புகிறோம் என கூறி அனைவரிடமும் 4 லட்சம் ரூபாய் வாங்கினார்கள். சிலரிடம் அட்வான்ஸ் தொகையாக 1 முதல் 2 லட்சம் வரை வாங்கினார்கள். அதன்பின்னர் தங்களை துபாய்க்கு விசிட் விசா மூலம் அனுப்பி விட்டு அங்கு சென்றதும் இரண்டு மூன்று நாட்களில் வேலை செய்வதற்கான பர்மிட் போட்டு தரப்படும் என கூறினார்கள். ஆனால் ஒரு வார காலமாகியும் வரவில்லை. பின்னர் அங்குள்ள ஒரு பிரீமியர் எப்ளாய்மெண்ட் என்ற கன்சல்டன்சிக்கு சென்று பதிவு செய்யுமாறு கூறினார்கள். அங்கு சென்று பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அங்கு தங்களின் பணத்தை செலவு செய்தே தங்கி வந்தோம். பின்னர் கோவை உள்ள தங்களை அனுப்பியவர்களையே தொடர்பு கொண்டும் முறையாக பதில் அளிக்கவில்லை செல்போனையும் சுவிச் ஆப் செய்து விட்டார்கள். பிறகு தங்களில் ஒரு சிலர் அங்குள்ள நண்பர்களிடம் பணத்தை பெற்று இந்தியா திரும்பினோம். மற்றவர்கள் அவர்களின் விசிட் விசா முடிந்ததால் அந்நாட்டு போலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு சிமரப்பட்டு இந்தியா திரும்பியுள்ளனர். எனவே தங்களது பணத்தை மீட்டு தந்து அவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.