தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டது . விஜயகாந்த் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பில், ’விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது.
ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அது நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
அன்பிற்கினிய நண்பர், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த், திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர் கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
கமல்ஹாசன் இரங்கல்
“எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த்-ன் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது; தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்; தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர்; எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது; சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்; அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்:
‘தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்’, இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் இரங்கல்
மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்:
“தேமுதிக-வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் ஆளுமையான, கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர். விஜயகாந்தை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’, என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவு
தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. விஜயகாந்தை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்
- விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் பதிவு
ராகுல்காந்தி இரங்கல்
தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது; விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
- இயக்குநர் பாரதிராஜா இரங்கல்
டி.டி.வி தினகரன் இரங்கல்
திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்.கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளனர்