லக்னோ: ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கும், அதைத் தொடர்ந்தும் அயோத்தி வருபவர்களுக்கு அது மறக்க முடியாத மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கும்பாபிஷேக விழாவுக்கு வருபவர்கள் பெறும் அனுபவம், முன் எப்போதும் இல்லாததாகவும், வாழ்வில் மறக்க முடியாததாகவும் இருக்கும். ஒரு மாநில அரசு தன்னளவில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனையும் மேற்கொள்ளும். அயோத்தி ராமர் கோயில் தேசிய கோயிலாகவும், இந்தியாவின் கலாச்சார, ஆன்மிக, சமூக அடையாளமாகவும் திகழும். இந்த கும்பாபிஷேக விழா, கோடிக்கணக்கான இந்துக்களுக்கு மகிழ்ச்சி, பெருமை, சுய திருப்தி ஆகியவற்றை வழங்கும். வரும் 22-ம் தேதி அன்று கோயில்களில் ராமஜோதி ஏற்றப்படும். நாடு முழுவதும் உள்ள மக்கள், இந்த விழாவை வரவேற்கும் விதமாக தங்கள் இல்லங்களில் ராமஜோதியை ஏற்ற இருக்கிறார்கள். இது முன் எப்போதும் இல்லாததது. உணர்ச்சிகரமான தருணம் இது. இவற்றைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேசத்தை சர்வதேச சின்னமாக மாற்றுவதற்கான வாய்ப்பையும் இந்த விழா வழங்குகிறது. எனவே, விழாவுக்கு வரும் விருந்தினர்கள், யாத்ரீகர்கள் மகிழ்வான அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் சர்வதேச தரத்திலானதாக இருக்க வேண்டும். அதற்காக, கோயில் அமைந்துள்ள அவாத்புரி முழுவதும் அலங்கரிக்கப்பட வேண்டும். ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் தீர்த்த ஷேத்ர அறக்கட்டறை மற்றும் மத்திய அரசு அமைப்புகளுடன் இணைந்து போக்குவரத்து நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். உபசரிப்பில் மிக முக்கியமானது தூய்மை. இதற்காக ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் ஆதரவைப் பெற வேண்டும். இதற்காக கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தவேண்டும். பிரதான சாலைகள், உள்புற சாலைகள் என எங்கும் குப்பைகள் இருக்கக்கூடாது, போதுமான அளவு குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். குப்பை மேலாண்மைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசால், அவாத்புரியில் நடத்தப்படும் உணவகங்களின் பெயர் மாதா சபரி பெயரிலேயே இருக்க வேண்டும். அரசு கட்டிடங்கள் ஒவ்வொன்றின் பெயரும் ராமாயணத்தோடு தொடர்புடைய பெயர்களாக இருக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால், பல்வேறு மொழிகளில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள மொழிகள் மற்றும் ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 9 உலக மொழிகள் ஆகியவற்றில் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். அயோத்தியில் மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, கோரக்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் சாலைகளிலும் இதுபோன்று பெயர்ப் பலகைகள் இடம் பெற வேண்டும். அயோத்தியில் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதில் சமரசம் கூடாது. சாலைகளில் ஆக்கிரமிப்புகள் கூடாது. கழிப்பிடங்கள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட வேண்டும். அயோத்திக்கு அருகில் உள்ள 6 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்தி செல்வதற்கான பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும். சரயு நதியில் கலாச்சார படகு சுற்றுலா மேற்கொள்ளப்பட வேண்டும். அயோத்தியில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்” என அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.