ஜனவரி மாதம் 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பூஜைகள் 16-ம் தேதி தொடங்குகின்றன. இந்த விழாவுக்காக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த 4,000 துறவிகளுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த நிலையில், அயோத்தி விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில்,“புனிதமான ஶ்ரீராமரை, அயோத்தியை உலகம் முழுவதும் இணைக்க எங்கள் அரசு உறுதியாக இருக்கிறது. விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தி தாம் என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள எங்கள் குடும்ப உறுப்பினர்களின் சார்பாக மகரிஷி வால்மீகி-க்கு மரியாதைக்குரிய அஞ்சலி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.