கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அங்கு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது.
சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர முடியாத நிலையில் ரெயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர். தண்டவாளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மீட்க முயற்சி நடந்து வந்தாலும் வானிலை காரணமாக பயணிகளை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சென்றிருந்தார். அங்கு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இது குறித்து அவர் தனது டிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராம மக்கள் 200 பேர் அங்குள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மக்களை சந்தித்து அவர்கள் ஊரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கேட்டறிந்தோம். மேலும், அவர்களுக்கு எல்லா வகையிலும் கழக அரசு உதவிகளை செய்திடும் என்று உறுதியளித்தோம். பேரிடர் நேரங்களில் மனிதநேயமே முன் நிற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மசூதியில் இடமளித்த நல்லுள்ளங்களுக்கு என் அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.