திருச்சி புதிய விமான நிலைய முகப்பில் ஸ்ரீரங்கம் கோயில் வடிவம்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்திருந்தார்.
இந்த புதிய முனையத் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதையும் கே.என். நேரு உறுதிப்படுத்தினார். இந்த புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டது. இதில் ஒரே சமயத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகள், 1500 உள்நாட்டு பயணிகளை கையாளலாம். இங்கு அரைவலுக்கு 6 வாயில்களும் டிபார்ச்சருக்கு 10 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. 40 குடியேற்ற பிரிவு மையங்கள், 48 செக் இன் மையங்கள், 3 கஸ்டம்ஸ் மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை உள்ளிட்டவை உள்ளன. காத்திருப்பு அறைகள், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், 1000 கார்களை நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த முனையத்தில் தமிழக கலாச்சார பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வடிவம் முனையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தேர் வடிவம் உள்ளிட்ட ஓவியங்கள் முனையத்தை மேலும் அழகாக்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முனையத்தின் மேலே தகடு அமைக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையும் கட்டப்பட்டு வருகிறது. வருகைகளில் நுழைவதற்கு ராஜகோபுரம் போன்ற அமைப்பும் உள்ளது.