மன்னார் வளைகுடா கடல்பகுதியில் செயற்கை பவளப்பாறை வளர்க்கும் பணி தீவிரம்: இயற்கையை பாதுகாக்க முயற்சிகள் மும்முரம்…

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடலில் உள்ள கடற்பசு, டால்பின்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நிதியில் செயற்கைப் பவளப்பாறைகள், கடற்புற்களை நட்டு வளர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையில் உள்ள தனுஷ்கோடி தீவில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதி என அழைக்கப்படுகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் வரை 560 சதுர கி.மீ பரப்பளவில் 21 தீவுகள் உள்ளன. இவை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பூங்கா தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும்.

இந்த பூங்கா பகுதியில் அரிய கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள், புற்கள், மாங்குரோவ் காடுகள் ஆகியவை உள்ளன.கடற்கரையோரங்களில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, சட்டத்திற்குப் புறம்பாக பவளத்திட்டுகளை அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதுவரை 65 சதவீதம் பவளத்திட்டுகள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், தேசியப் பூங்கா பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், ஒன்றிய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி வருகிறது. இதனடிப்படையில், தீவுப்பகுதியில் நடுக்கடலில் இருந்து பவளப்பாறைகளை எடுத்து வந்து, ஆழமான இடங்களில் செயற்கையாக பவளப்பாறைகள் மற்றும் கடற்புற்கள் வளர்க்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா வனஉயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் கூறுகையில், ”ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2022ல் 600 சதுர மீட்டருக்கு ரூ.20 லட்சம் செலவில் செயற்கை பவளப்பாறைகள், கடற்புற்கள் நட்டு வளர்க்கப்பட்டன. 2023ம் ஆண்டு 4,500 ச.மீ., பரப்பில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டமிட்டு இதுவரை 1,500 ச.மீ. அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க கடந்தாண்டு 70 ஹெக்டேர் பரப்பில் மாங்குரோவ் (அலையாத்தி காடுகள்) செடிகள் நடப்பட்டுள்ளன. இந்தாண்டு 85 ஹெக்டேர் பரப்பில் மாங்குரோவ் நடுவதற்கு திட்டமிட்டு ராமநாதபுரம், தூத்துக்குடியில் 25 ஹெக்டேர் பரப்பளவில் செடிகள் நடப்பட்டுள்ளன” என்றார்.