அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது…

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் கட்சிகள், அதற்கான வியூகங்களை அமைப்பது, தொண்டர்களின் மனநிலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாநகராட்சியை சேர்ந்த திமுக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதிமுக ஐ.டி. அணி கூட்டம் முன்னதாக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஐ.டி. அணி கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, ”சமூக வலைதளங்களில் செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்கக் கூடாது. பிற கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணி போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்.

மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இந்த அணி எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். எந்த விவகாரம் என்றாலும் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். அதிமுக அரசின் சாதனைகளையும், திமுக அரசின் தவறுகளையும் மக்களிடம் ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.