திருச்சி குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் மருத்துவ முகாம்…

திருச்சியில் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவ முகாம்.திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு ஆகியோா் தலைமை வகித்தனா்.
இக்கூட்டத்தில், ஆவூா் பிரிவு சாலையில் உள்ள அன்னை சத்யா அம்மையாா் அரசுக் குழந்தைகள் இல்லத்திலிருந்து மாத்தூா் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று வர போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவும், புள்ளம்பாடி புஞ்சை சங்கேந்தி குழந்தைகள் மையக் கட்டடத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் இளைஞா் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடைபெற்று வருகின்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்துதல், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடா்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் உதவி மையத்தின் ஆகஸ்ட்-2023 முதல் டிசம்பா்-2023 வரையிலான காலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் நீதித்துறை நடுவா் சிவக்குமாா், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் திரு.ப.ராகுல் காந்தி, சமூக நலத்துறையினா் மற்றும் குழந்தை பாதுகாப்புத் துறையினா், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.