இபிஎஸ் குறித்த ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்: ஓபிஎஸ் தகவல்…

சேலம் / நாமக்கல்: பழனிசாமி குறித்த ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன், என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக, விசுவாசத்துடன் இருந்ததால் தான், தமிழக முதல்வராக இருப்பதற்கு 2 முறை எனக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால், தன்னை நம்பியவர்களுக்கு பழனிசாமி துரோகம் செய்தார். அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் தொடர ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு துரோகம் செய்தார்.

அதிமுக ஆட்சி மீதான நம்பிக்கைக்கு வாக்கெடுப்பு நடைபெற்ற போது நாங்கள் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தான், ஆட்சி நிலைத்தது. ஆனால், எங்களுக்கும் துரோகம் செய்தார். அவர் தலைமையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், மக்களவைத் தேர்தல், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் என அனைத்திலும் தொடர் தோல்விகளே கிடைத்தன. அவரது தலைமை மீது, தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கை இல்லாததால் தான் தொடர் தோல்விகள் கிடைத்தன. நீதிமன்றங்களில் எங்களுக்கு சாதகமற்ற தீர்ப்புகள் கிடைத்தாலும், அதனை நாங்கள் விமர்சிக்க மாட்டோம். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறுவோம். பழனிசாமியிடம் இருந்து, கட்சியையும் தொண்டர்களையும் மீட்போம், என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் பெங்களூரு புகழேந்தி, மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏழை, எளிய மக்கள் மீது பற்று கொண்டவர். அவரது மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கரூர், திண்டுக்கல்லில் நடைபெற இருந்த எங்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பழனிசாமி குறித்த ரகசியம் உள்ளது. அதனை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன். அதிமுகவை படுகுழியில் தள்ளிய பழனிசாமியின் தலைமையை ஒரு போதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பாஜகவுடன் எங்களுக்கு சுமுகமான உறவு இருக்கிறது. அது மக்களவைத் தேர்தலிலும் தொடரும். டி.டி.வி.தினகரனுடன் நாங்கள் அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம், என்றார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். ஓபிஎஸ் அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.