நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
மாநாட்டு மேடையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, நடிகை ஷோபனா, பாடகி வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்டோருடன் பிரதமர் உரையாடினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெண்களை வலுகுறைந்தவர்களாக நினைத்ததாகவும், பாஜக அரசு பெண்களுக்கு மக்களவையில் இடஒதுக்கீடு வழங்கி முழு உரிமையை அளித்துள்ளதாகவும் கூறினார். சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார், நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியையும் சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் பூலே ஆகியோர் பெண் சக்தி எத்தகைய ஆற்றல் கொண்டது என்பதை நமக்கு கற்பித்திருக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
சபரிமலையில் கூட்ட நெரிசலால் பக்தர்கள் அவதியடைவது, மாநில அரசின் இயலாமைக்கு சாட்சி என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்துவதற்கு மட்டுமே இந்தியா கூட்டணி கட்சிகளுக்குத் தெரியும் என விமர்சித்தார். திருச்சூர் பூரம் திருவிழாவை அரசியலாக்கியது வேதனை அளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, கோயில்கள் மற்றும் திருவிழாக்களை பயன்படுத்தி கொள்ளையடிப்பதே இந்தியா கூட்டணி கட்சிகளின் நோக்கமாக இருப்பதாகவும் கடுமையாக சாடினார். அங்கன்வாடி, ஆசிரியர்கள், 100 நாள்கள் திட்டத்தில் பயன்பெறுபவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாஜக மகளிர் அணியினர் என 20 லட்சம் பெண்கள் மாநாட்டில் பங்கேற்றதாக பாஜக கூறியுள்ளது.