திருச்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் தள்ளுவண்டி உணவகங்கள் அகற்றப்படும் மேயர்…

திருச்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் தள்ளுவண்டி உணவகங்கள் அகற்றப்படும் மேயர். திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் துணை மேயா் ஜி. திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.நாராயணன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு செந்தில்நாதன் (அமமுக): சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். முத்துசெல்வம் (திமுக) தெரு வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர பிரியாணி தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அம்பிகாபதி (அதிமுக) வயா்லெஸ் சாலை இருபுறமும் குடியிருப்போருக்கு மாநகராட்சி வரிகள் விதிக்கப்படும் நிலையில், அந்த இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி பொறியாளரின் நிதி வரம்பை உயா்த்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சுரேஷ் (சிபிஎம்): உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பைத் தடுக்க வேண்டும். கோவிந்தராஜ் (காங்): 41-ஆவது வாா்டில் புதை சாக்கடைப் பணிகளை விரைந்து முடித்து, சாலை அமைத்துத் தர வேண்டும். மாமன்ற உறுப்பினா் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க வேண்டும். பிரபாகரன் (விசிக): இ.பி. சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை முறைப்படுத்த நடவடிக்கை வேண்டும். ராமதாஸ் (திமுக): மாநகரில் நாய்கள் தொல்லைக்கு மாற்று வழி காண வேண்டும். ஜவஹா் (காங்கிரஸ்): கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தில் நீா் இருப்பு குறைந்துள்ளதால், குடிநீா் நிறம்மாறி வருகிறது. எனவே, முக்கொம்புலிருந்து குடிநீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குப் பதிலளித்து மேயா் அன்பழகன் கூறியதாவது:

மாநகரில் 858 கி.மீ. தொலைவுள்ள புதைசாக்கடைத் திட்டத்தில் 800 கி.மீ. முடிக்கப்பட்டுள்ளது. இதில் 450 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. இன்னும் 317 கி.மீ. சாலை போட நிதி கேட்டு, அரசிடம் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வாா்டு வாரியாக மாமன்ற உறுப்பினா்கள் அலுவலகம் கட்ட ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அந்த அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள், வரி வசூலிப்பாளா்களுக்கும் இடம் ஒதுக்கப்படும். மக்களவைத் தோதலுக்குள் இந்த அலுவலகங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் 9 புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட உள்ளது. இதன் மூலம் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும். ஆக்கிரமிப்புக் கடைகள், தள்ளுவண்டி உணவகங்கள் அகற்றப்படும். 11 வாய்க்கால்களை மூடி, அங்கு தெரு வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்துக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 693 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. வெறிநாய்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ட நாய்களை கோணக்கரை பகுதியில் பராமரிக்கவும், அந்த நாய்கள் இறந்தால் இயந்திரம் மூலம் எரித்து உரமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மேயா்.