முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடம்: பிரதமர் மோடி

பிரிட்டிஷ் வணிக செய்தித்தாளான பைனான்சியல் டைம்ஸுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாகவும், எந்தவொரு மத சிறுபான்மையினருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். “உலகின் பிற இடங்களில் துன்புறுத்தலை எதிர்கொண்டாலும் முஸ்லீம்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர். இந்திய சமுதாயம் எந்தவொரு மத சிறுபான்மையினரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்பதை இது காட்டுகிறது.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் முஸ்லீம் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடியிடம் பைனான்சியல் டைம்ஸ் கேள்வி கேட்டது. ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் இந்தியாவில் வசிக்கும் பார்சிகளை சிறுபான்மையினர் என விவரித்த பிரதமர், அவர்களது பொருளாதார வெற்றியை சுட்டிக்காட்டினார். 2023ஆம் ஆண்டிற்கான அரசாங்க மதிப்பீட்டின்படி, இந்தியாவில் சுமார் 20 கோடி முஸ்லீம்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 14.28 சதவீதம் பேர் முஸ்லீம்கள் உள்ளனர்.

முன்னதாக, அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் தனது அரசு முறை பயணத்தின்போது, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லை என பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்தார். அப்போது, ‘உங்கள் நாட்டில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டவும் என்ன நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளீர்கள் என்று மோடியிடம் கேட்கப்பட்டது.’ அதற்கு பதிலளித்த அவர், அதற்கு அவசியம் இல்லை என்றார். விமர்சகர்கள் மீது பாஜக அரசாங்கத்தின் அடக்குமுறை பற்றி பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு, “நம் நாட்டில் உள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் இந்தக் குற்றச்சாட்டுகளை நம் மீது வீசுவதற்கு ஒரு முழு அதிகாரம் அளிக்கும் அமைப்பு உள்ளது. தலையங்கங்கள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள், வீடியோக்கள், ட்வீட்கள் போன்றவற்றின் மூலம் அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உண்மைகளை விளக்க மற்றவர்களுக்கு உரிமை உண்டு.” என பதிலளித்தார். 2024 மக்களவை தேர்தல் பற்றி பேசிய பிரதமர் மோடி, சாமானியர்களின் வாழ்க்கையில் உறுதியான மாற்றத்தை பதிவு செய்ததன் மூலம் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும் என மிகுந்த நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.