புதுடில்லி : சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அரசியலில் நீடிக்கும் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் என்ற அரக்கர்களுக்கு, பெண்கள் மற்றும் இளைஞர்கள் முடிவுகட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127வது பிறந்தநாள், பராக்கிராம தினமாக நேற்று கொண்டாடப்பட்டது.
புதுடில்லியில் நடந்த இவ்விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாட்டை வளர்ச்சி அடைய செய்ய அரசியல் ஜனநாயகமும், ஜனநாயக சமுதாயமும் வலுவாக இருக்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கருதினார். எனினும், சுதந்திரம் அடைந்த பின் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இதுதொடர்பாக, நேதாஜி நன்கு உணர்ந்திருந்ததால் தான், நாடு சந்திக்க உள்ள சவால்களை எடுத்துரைத்து எச்சரிக்கையும் விடுத்தார். சுதந்திரத்திற்கு பின் நம் நாடு வளர்ச்சி அடையாததற்கு வாரிசு அரசியலும் ஊழலும் முக்கிய காரணம். இவற்றிற்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் தான் முடிவுகட்ட வேண்டும். இதற்கு எதிராக நாம் தைரியத்துடன் போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.