இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல் ..!

பொங்கல் விழா தொடர்பான கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம், குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா தளங்களுக்கு செல்வது, ஜல்லிக்கட்டு போட்டி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் என மாநிலம் முழுவதும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில்நேற்று திருவள்ளுவர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடியும் தமிழில் டிவீட் செய்து, திருவள்ளுவர் தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அதில், ”திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்.” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”காவி உடையை அணிந்த மாதிரியான திருவள்ளுவரின் புகைப்படத்தை இணைத்துள்ளார். அதோடு சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்.” என குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவருக்கு பாஜகவினர் காவி உடை அணிவித்ததற்கு பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே கடும் எதிர்ப்புகளை பதிவு செய்த நிலையில், அண்ணாமலை மீண்டும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.