கோவை : பெண் போலீசாரையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்ததாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதே சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் , பெலிக்ஸ் ஜெரால்டு மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து டெல்லியில் பதுங்கி இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர் .பின்னர் அவரை திருச்சி சிறையில் அடைத்தனர். பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசிலும் வழக்கு இருப்பதால் அவரை கோவை போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று காலை கோவை போலீசார் திருச்சி சென்றனர். நீதிமன்ற அனுமதியை திருச்சி சிறை அதிகாரிகளிடம் காட்டி அவரை கைது செய்து பெண் போலீசார் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோவை 5-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வருகிற 31- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் . இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெலிக்ஸ் ஜெரால்டை அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் திங்கள்கிழமை வருகிறது..