நியூயார்க்: ரஷ்யாவுடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி, உக்ரைனின் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கவும், அதன் மூலம் வரும் லாபத்தை பிரித்துக்கொள்ளவும் டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார்.
இதற்கான ஒப்பந்தத்தில் நாளை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. போருக்காக செய்யப்பட்ட செலவுக்கு பதிலாக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது.
உக்ரைனில் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் போன்ற அரிய கனிமங்களும், ஸ்கேண்டியம் போன்ற அரிய தாதுக்களும் இருக்கின்றன. இவை மின்சார வாகன உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று வரை சீனாதான் இந்த கனிமங்களை அதிக இருப்பு வைத்திருக்கிறது. எனவே, சீனாவை வீழ்த்த உக்ரைன் கனிமங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.
அதேபோல, விண்வெளி துறையிலும் இந்த கனிமங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே இவை அமெரிக்காவின் முதன்மை தேவையாக இருக்கின்றன.
கடந்தை 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போரை அறிவித்தது. அப்போது தொடங்கி இப்போது வரை ₹5.45 லட்சம் கோடி அளவுக்கு ராணுவ உதவியை செய்திருக்கிறது. இது கடந்த 2024-2025 தமிழக பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியை விட ₹1.5 லட்சம் கோடி அதிகமாகும். பைடன் போன பிறகு டிரம்ப் புதிய அதிபராக பொறுப்பேற்றார். அவர், இழந்த பணத்தை எப்படி டபுளாக வசூலிப்பது என்று யோசித்திருந்தார்.
இந்த யோசனையின் அடிப்படையில்தான் கனிம வளங்களை சுரண்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா செலவு செய்தது வெறும் ₹5.45 லட்சம் கோடிதான். ஆனால், கனிம வளங்களை சுரண்டுவதன் மூலம் ₹41.5 லட்சம் கோடியை கொள்ளையடிக்க டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார்.
இது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் நாளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார். அமெரிக்கா வந்து டிரம்ப்பை சந்திக்கும் அவர், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறார். இதன் மூலம் ரஷ்யாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும், நீண்டகால பாதுகாப்பு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி கூறுகிறார்.
ரஷ்யா-உக்ரைன் போரே தேவையில்லாத ஆணிதான். இதற்கு காரணமும் அமெரிக்காதான். அப்படி இருக்கையில் மீண்டும் ஏன் அமெரிக்காவின் உதவியை உக்ரைன் நாட வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேட்டோ எனும் ராணுவ கூட்டமைப்பை சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கியிருந்தது. சோவியத் உடைந்த பின்னர் இந்த கூட்டமைப்பு கலைக்கப்படவில்லை. இதில் முன்னாள் சோவியத் நாடுகள் அனைத்தும் சேர்ந்து வருகின்றன. உக்ரைன், ரஷ்யாவுக்கு பக்கத்து நாடு. இது நேட்டோவில் சேர முயன்றது. அப்படி நடந்தால், உக்ரைன்-ரஷ்யா எல்லையில் நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல்.
அதாவது பாகிஸ்தான்-இந்தியா எல்லையில் சீன ராணுவம் வந்தால் எப்படி இருக்கும்? எனவேதான் உக்ரைனுக்கு எதிராக போரை தொடங்கியது ரஷ்யா. இன்று இந்த போரை காரணம் காட்டி கனிம வள கொள்ளையில் அமெரிக்கா இறங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.